Friday, 18 June 2010

எழுதி, எழுதி என்ன பிரயோஜனம்?


"ஏன் எழுத வேண்டும்? யாருக்காக எழுத வேண்டும்? எழுதி, எழுதி என்ன பிரயோஜனம்?" என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கிறது நகுலனின் "நினைவுப் பாதை" நாவலின் முன்னுரை. "இனி எழுதுவதற்கு என்ன இருக்கிறது, இனி எழுதவே கூடாது என்று இருந்தவன் இப்போது மறுபடியும் எழுதுகிறேன்." என்று ஆரம்பிக்கிறது நாவல்.

கோடிக்கணக்கான தமிழர்கள் அறிந்த நகுலன் போன்ற எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல, ஏழெட்டு  பேர் மட்டுமே அறிந்த என்னைப் போன்ற சாதாரண பதிவனுக்கும் "எழுதி, எழுதி என்ன பிரயோஜனம்?" என்ற கேள்வி தலைக்குள் ஒலித்துக் கொண்டே தானிருக்கிறது.

  • ஏழை மக்களுக்கு சில உதவிகள் செய்யனும்னா "நானும் வர்றேன்" சொல்ற நாலைந்து நண்பர்கள் கிடைச்சிருக்காங்க.

  • புரியுதோ இல்லையோ, ஓரிரு  இலக்கியவாதிகளுடன் உட்கார்ந்து உரையாடும் வாய்ப்பு கிடைக்குது.

  • "பெங்களூர்-ல, சென்னையில வேலை செய்ய பிடிக்கலையா? நாங்க வேணும்னா வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறோம்" எனும் வெளிநாட்டுப் பதிவுலக நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. (இன்னும் வாங்கித் தரலைன்னாலும், உதவி செய்றோம்னு சொல்றதுக்கே ஒரு பெரிய மனசு வேணும்.)

  • தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த தமிழர்களில் நானும் ஒருத்தன்-ன்னு சொல்லிக்கிரதில ஒரு சின்ன சந்தோஷம் / பெருமை.

"என்னது இதெல்லாம்? 'நகுலன் வீட்டில் யாருமில்லை, கிறு கிறு வானம், உப பாண்டவம், நகுலனின் நினைவுப் பாதை', இப்படி தமிழ்ப் புத்தகமா வாங்கித் தள்ளுறத விட்டுட்டு, SAP BO XI R3.1 படிச்சு certification வாங்கினா வெளிநாட்டில ஒரு வேலை வாங்கலாம், சென்னையில வீடெல்லாம் நாம வாங்குற விலையிலயா இருக்கு? இங்க இருந்தா காணி நிலம் கூட வாங்க முடியாது." என்கிறாள் என் செல்லம்மா.

இடுகைகள் எழுதுவதால் பத்து பைசா ஒரு ரூபாய் கூட என் வங்கிக் கணக்கில் சேராது, ஒத்துக் கொள்கிறேன். ஆனாலும், பணம் சேர்க்க உதவும் காரியங்கள் மட்டுமே மனிதன் செய்ய வேண்டுமென்றால் வாழ்க்கையில் எந்த சுவாரஸ்யமும் இருக்காது. வீடு வாங்குறதும், பணம் சேர்க்கிறதும் மட்டுமேயா வாழ்க்கை? அதுவும் முக்கியம் தான், அதற்கான முயற்சிகளை செய்தால் நடக்க வேண்டிய நேரத்தில் தன்னாலே நடக்கும்.

"இதில அப்படி என்ன தான் இருக்கோ, உங்கப்பா எப்போ பாத்தாலும் தமிழில எழுதிட்டு இருக்காரு..." என்று மகனிடம் புகார் செய்கிறார் என் செல்லம்மா. "ஒரு தமிழன் தமிழில் எழுதுவது கொலைக்குற்றமா என்ன?" என்ற கேள்விக்கு எப்போதும் பதிலிருந்ததில்லை.

"எழுதி எழுதி தான் எழுத்தை அறிந்து கொள்ள முடியும்", "எழுத, எழுத எழுத்தின் ரகசியம் புரியும்" என்கிறார் நகுலன். நான் எழுதுறதெல்லாம் கதை, கவிதை வகையில் சேருமோ இல்லையோ, நேரம் கிடைக்கும் போது ஓரிரு இடுகைகள் எழுதுவேன், ஏதோ கொஞ்சம் மனசுக்கு நிம்மதி கிடைக்கிற மாதிரியிருக்கு. (உங்களுக்கு இருக்கிற நிம்மதியும் போயிடுதா? அடப் பாவிகளா?).

நேரம் கிடைத்தால் நகுலனின் "நினைவுப் பாதை" படிச்சுப் பாருங்க-ன்னு சொல்றது,  சாரு  நிவேதிதா, 2005-ல சூப்பர்-ஹிட் ஆன "Sean Paul" பத்தி 2010-ல சிலாகித்து எழுதிட்டு, நீங்களும் அவர் பாட்டைக் கேட்டுப் பாருங்கன்னு சொல்றது மாதிரி அபத்தமானது. (@Charu: விடுங்க பாஸ், இந்த தமிழ்ப் பதிவர்கள் எப்பவுமே இப்படித் தான் அடிச்சிக்கிட்டே இருப்பாய்ங்க, உங்களுக்கு அடி வாங்கிறதெல்லாம் சகஜம் தானே, இதெல்லாம் பாத்தா தொழில் பண்ண முடியுமா?)

ஏற்கனவே நீங்கள்லாம் நகுலனின் படைப்புகள் பலவற்றை வாசித்திருப்பீர்கள். இந்த இடுகை, நான் படிச்சிட்டேன்னு சொல்லி பெருமையடிச்சுக்க மட்டும் தான் (நல்லாப் பாத்துக்க, நல்லாப் பாத்துக்க, நானும் படிப்பாளி தான்)

நாவலிலிருந்து ஒரு கவிதை...
சூசிப் பெண்ணே
ரோசாப் பூவே
ராத்திரியெல்லாம் வெயிலடிக்கிது
பகலில் பைத்தியம் பிடிக்குது.



9 comments:

சூரியன் said...

:)
நிறையா எழுதுங்கப்பூ..

கார்த்திகைப் பாண்டியன் said...

நகுலன்.. இன்னும் வாசிக்க ஆரம்பிக்கவில்லை..:-(((

புத்தகத்த பத்தி சொன்னத விட.. ஏன் எழுதுறோம்னு சொன்னீங்க பாருங்க.. அது..:-)))

இதையும் கொஞ்சம் வாசிங்க நண்பா..

http://ponniyinselvan-mkp.blogspot.com/2009/02/blog-post_18.html

நேசமித்ரன் said...

மெட்ராசில ஜாம்பவானுங்க கூட போட்ட மீட்டிங்கு பத்தி எழுதுரேன்னு சொன்னீங்களே எங்க ஜோ அது ?

வெயிட்டிங்கு

ம்ம்

நினைவுப்பாதையை ஒரு தன்னைத்தானே சோதித்தறிதல் பாணியில எழுதி இருக்குறது நாவலுக்கும் பொருந்தும்

Joe said...

நன்றி சூரியன் (எ) தினேஷ். மாசத்துக்கு ஒன்றிரண்டு எழுதினா பிரச்சினை, இதில நிறையவா?!? :-(

நன்றி கார்த்திக். அருமையான லிங்க் கொடுத்தீங்க, உத்வேகமளிக்கும் கட்டுரை!

நன்றி நேசமித்ரன், அந்த சந்திப்பு பத்தி எழுதினா அதுக்கப்புறம் நான் வேற இடுகைகள் எழுதுவதற்கு கணினி இருக்காது (தெருவில படுத்து தூங்குறவனுக்கு இணைய இணைப்பும் கிடைக்காது)

இனியன் பாலாஜி said...

நன்றாக இருக்கிறதே நிறைய எழுதுங்கள் . எனக்கு உங்களைப் போலெல்லாம்
எழுத வராது.



//ஏதோ கொஞ்சம் மனசுக்கு நிம்மதி கிடைக்கிற மாதிரியிருக்கு. (உங்களுக்கு இருக்கிற நிம்மதியும் போயிடுதா? அடப் பாவிகளா?)//.
நல்ல நகைச் சுவைக்கு இது உதாரணம்

//ஏழை மக்களுக்கு சில உதவிகள் செய்யனும்னா "நானும் வர்றேன்"
சொல்ற நாலைந்து நண்பர்கள் கிடைச்சிருக்காங்க//

இது போதுமே உங்க தலைப்பையே மாற்ற வேண்டியதாகி விட்டதே.

.
//தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த தமிழர்களில் நானும் ஒருத்தன்-ன்னு
சொல்லிக்கிரதில ஒரு சின்ன சந்தோஷம் / பெருமை//

இதை விட வேறென்னங்க வேணும்

உங்களூரில் எப்போங்க பதிவர் சந்திப்பு அழைப்பு விடுங்கள் வர முயற்சி செய்கிறேன்
இனியன் பாலாஜி

அஷீதா said...

ஹாய் ஜோ..நலமா?

ரொம்ப நாள் கழிச்சு உங்க ப்ளாக் பக்கம் வரேன்.

ஏன் எழுதுறோம்னு விளக்கம் சொன்னது ரொம்ப அருமை.

இதையே நான் தொடர் பதிவா எழுதலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்.

இன்னும் நிறைய எழுதுங்கள் ஜோ :))

Joe said...

நன்றி அஷீதா.
தொடர் பதிவா? சக பதிவரொருவர் ஏற்கனவே இது போன்ற இடுகை எழுதி, பிறரை அழைத்ததாக ஞாபகம். (ஏன் எழுதுகிறீர்கள் என்ற தலைப்பு என்று நினைக்கிறேன்)

திரு. இனியன் பாலாஜி,
எனக்கே இன்னும் உருப்படியா எழுத வரல, இதுல நீங்க வேற!
எனினும் வரி வரியாக உதாரணம் காட்டி பின்னூட்டம் எழுதியதற்கு நன்றி.

சென்னையில் எப்போது பதிவர் சந்திப்பு நடக்கிறதென்றே தெரிவதில்லை.
தெரிய வரும்போது அழைக்கிறேன் அய்யா!

natarajan venkatasubramanian said...

நானும் பல முறை யோசிச்சேன். எதுக்கு எழுதனும். நீங்க சொன்ன மாதிரி ஒரு பிரயோஜனமும் இல்ல தான். ஆனா, ஒரு பதிவு முடிச்ச உடனே ஒரு சந்தோசம் வருமே சார், அதான் Joy of Accomplishment அதுக்கு தான் இதெல்லாம்.

நான் ரொம்ப எழுதறதும் இல்ல, எழுதினத யாரும் படிக்கறதும் இல்ல. ஏதோ ஒரு சந்தோஷம் அவ்வளவுதான்.

Joe said...

நன்றி வெங்கட்.

உங்க இடுகைகளை படிச்சுப் பார்த்தேன். இயல்பான, அழகான மொழிநடை, தொடர்ந்து எழுதுங்கள்.