Saturday, 12 June 2010

மறுக்கப்பட்ட நீதி...

(Bhopal Memorial, the writing on the wall reads "Hang Anderson" in Hindi)


December 2,1984 & December 3,1984 இரவில் Union Carbide தொழிற்சாலையிலிருந்து வெளியான விஷ வாயு, 25,000-க்கு அதிகமான மக்களை கொன்றது. இத்தனை வருடங்கள் கழித்து ஏழு குற்றவாளிகளுக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு உடனே ஜாமீன் வழங்கப்பட்டு விட்டதால் அவர்கள் ஒரு நாள் கூட சிறையில் இருக்கவில்லை. முதல் குற்றவாளியான ஆன்டர்சன்-க்கு எந்த தண்டனையுமில்லை.

இதுல நம்மூரு தொலைகாட்சி நிறுவனங்கள் "அமெரிக்க அரசாங்கம் அவரை ஏன் விசாரணைக்காக இந்தியாவுக்கு அனுப்பவில்லை?"-ன்னு விளக்கம் தரணும்னு கோரிக்கை வேற. சம்பவம் நடந்து சில மணி நேரங்களிலேயே அரசாங்க வாகனத்தில பத்திரமா விமான நிலையம் அழைத்து வந்து போபால்-லிருந்து டெல்லி வரை அரசாங்க விமானத்தில் ஆன்டர்சன்னை அனுப்பி வைத்ததே அப்போ மத்திய பிரதேசம் முதல்வராக இருந்த அர்ஜுன் சிங் மற்றும் மத்திய அரசில் முக்கியமானவர்களின் அனுமதியோடு தானே? பல வருடங்களுக்கு முன்பே, நம்ம அரசாங்கம் தான் அவரை விசாரணைக்காக இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டாம் என்று CBI-க்கு உத்தரவு போட்டிருக்கிறது. இப்போ போய் அவுங்கள கேள்வி கேட்டா?

எதுக்கு அந்தாளு இங்கே வரணும்? "இருபத்தியாறு வருஷம் கழிச்சு நல்லாக் கொடுக்கிரானுங்கய்யா தீர்ப்பு"-ன்னு அந்தாளும் கேவலமா சிரிக்கிறதுக்கா? மற்ற குற்றவாளிகளுக்கு விதித்த ஒரு லட்சம் ரூபாயை நானும் கொடுக்கிறேன், வேணும்னா cheque எழுதி தபாலில் அனுப்பி விடுறேன்னு சொல்லிருவான். ("ஏற்கனவே கோடிக்கணக்கில லஞ்சம் வாங்கிட்டு தானே நாட்டை விட்டு தப்பிக்க விட்டீங்க, இப்போ மறுபடியும் ஏன் கேக்குறீங்க?"-ன்னு கேட்டாலும் கேக்கலாம்)

வீரப்ப மொய்லி சொல்றாரு, "அவர் இன்னும் குற்றவாளிகள் பட்டியலில் இருக்கிறார், விரைவில் பிடித்து விடுவோம்"-ன்னு. "இந்தியர்களுக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப குறைவு"-ன்னு எவன்டா சொன்னான்? கொஞ்சம் கூட சிரிக்காம அடிச்சிட்டே போறாரு பாரு, ஜோக்!

அந்தாளு ஏற்கனவே படு கிழவனாகிட்டான், இப்பவே 90 வயசாகிடிச்சு. நீங்க high court, supreme court-ன்னு மேல் முறையீடு பண்ணி முடிவு கண்டுபிடிக்கிறதுக்கு முன்னால, அவர் பேரன், பேத்தியெல்லாம் கூட செத்துப் போயிருப்பாங்க.
 
ஆன்டர்சன் தப்பிச் சென்றதற்கு அர்ஜுன் சிங் தான் பொறுப்பேற்க வேண்டும் என்கிறது ஒரு தரப்பு. அமெரிக்க அரசாங்கம் விடுத்த கோரிக்கையின் பேரில் ராஜீவ் காந்தி தான் ஆண்டர்சன்னை அமெரிக்காவிற்கு உடனடியாக அனுப்ப ஏற்பாடு செய்தார், அவர் செய்த தவறை மறைக்க அர்ஜுன் சிங்கை பலிகடா ஆக்குகிறார்கள் என்கிறது இன்னொரு தரப்பு. நம்மூர்ல இறந்தவர்களெல்லாம் தெய்வம் இல்லையா? அதுவும் பல்லாண்டு காலமாக நாட்டை ஆண்ட நேரு வம்சமில்லையா? அதுனால ராஜீவை யாரும் குறை சொல்லக் கூடாது.
எது எப்படியோ, பொது மக்களுக்காக உழைக்க வேண்டிய அரசாங்க இயந்திரம், கொழுத்த பணக்காரர்கள் தூக்கி எறிந்த எலும்புத் துண்டுகளுக்காக, நாயைப் போல வேலை செய்திருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்கள், உறவினர்களை இழந்தவர்கள் ஆன்டர்சன் உருவ பொம்மையை செருப்பால, விளக்கமாறால அடிச்சுக் கோபத்த தீர்க்கிறாங்க. அவரை விட பெரிய குற்றவாளிகள், அவரை தப்பித்துப் போக விட்ட அரசியல்வாதிகளும், விசாரணையை இழுத்தடித்த காவல் துறையும், CBI-யும், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் மனிதாபிமானமே இல்லாத முறையில தீர்ப்பு சொன்னவர்களும் தான். பொது மக்கள் அடித்து நொறுக்க வேண்டியது உருவ பொம்மைகளை அல்ல...


Photo courtesy: http://en.wikipedia.org/wiki/Bhopal_disaster


2 comments:

நியோ said...

பொது மக்கள் அடித்து நொறுக்க வேண்டியது உருவ பொம்மைகளை அல்ல...

சரியா சொன்னீங்க ஜோ !

Joe said...

நன்றி நியோ.