Wednesday, 9 June 2010

தனியார் பள்ளிகளும், சமச்சீர் கல்வியும்!


"போங்கய்யா, போய் புள்ளைக் குட்டிகள படிக்க வைங்கய்யா" என்று கமல் அழுது கொண்டே சொல்லும் வசனம், நகைச்சுவைக்காக நாம் பல இடங்களில் பயன்படுத்தும் ஒரு வசனமாக மாறிப் போய் விட்டது. ஆனால் பிள்ளைகளை படிக்க வைப்பது என்பது பொருளாதார ரீதியாக பெரும் சுமையாக மாறிக் கொண்டிருக்கிறது. எனது மகனின் KG fees பற்றி என் தந்தையிடம் கூறிய போது, MCA வரை உன்னைப் படிக்க வைக்க எனக்கு அவ்வளவு செலவு ஆகியிருக்காது என்றார்.

இருப்பினும் அதிக பணம் செலவழித்து பிள்ளைகளை படிக்க வைத்தால் தான், அவர்களுக்கு தரமான கல்வியும், வளமான எதிர்காலமும் கிடைக்குமென்று பலரும் நம்புகிறோம்.
ஒரு பக்கம் அரசாங்கம் சமச்சீர் கல்வி-ங்குது, எல்லா தனியார் பள்ளிகளும் குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கக் கூடாதுன்னு சொல்லுது, இருந்தாலும் receipt வாங்காம, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமா நிறைய பள்ளிகள் வசூலிக்கிறார்கள் என்று சென்னையில பல பள்ளிகளுக்கு முன்பு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்,  சாலை  மறியல் செய்திருக்கிறார்கள். (fees receipt கொடுக்கலைன்னா பெற்றோர்கள் புகார் கொடுத்தாலும், நிரூபிக்க எந்த ஆதாரமும் இருக்காதில்லையா? tricky ba$tard$)

"ஏன் அதிகக் கட்டணம் வசூலிக்கிறீர்கள்?" என்று கேட்ட பெற்றோர்களை, தனியார் பள்ளி நிர்வாகத்தினர் "உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாழடிக்காதீர்கள்" என்று மறைமுகமாக மிரட்டியிருக்கிறார்கள்.

அரசாங்கம் நிர்ணயித்த கட்டணத் தொகை மிகவும் குறைவு என்றும், அதனைக் கொண்டு ஆசியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாது என்பது அவர்களின் வாதம். உதாரணத்திற்கு, முதலாம் வகுப்பு மாணவர்களிடம் Rs. 11,000-க்கு மேல் வசூலிக்கக் கூடாது என்பது அரசாங்க உத்தரவு. அதன்படி கட்டணம் வசூலித்தாலே, வருடத்திற்கு நிகர லாபம் எட்டு லட்சம் வரும். (எட்டு ஆசிரியைகள் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று, அவர்களுக்கு மாதம் Rs. 10000 ஊதியம் என்று, நான்கு sections, 160 குழந்தைகள் இருக்குன்னு வைத்துக் கொள்ளுங்கள்). இப்படியிருக்க, எந்த கணக்கின்படி, இவர்கள் ஆசியர்களுக்கு சம்பளம் தரவே எங்களுக்கு கட்டுபடியாகாது என்று புலம்புகிறார்கள்? எதற்காக பேராசை கொண்டு இன்னும் அதிகமாக கட்டணம் வசூலிக்கிறார்கள்?

எனது மகன் படிக்கிற பள்ளியில் இந்த ஆண்டுக்கான கட்டணம் இன்னும் எவ்வளவு என்றே சொல்லவில்லை. கண்டிப்பாக அரசாங்கம் நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாத் தான் வசூலிப்பார்கள் என்ற அவநம்பிக்கையே மேலோங்கி நிற்கிறது.

சில நாட்களுக்கு முன்பு பண்பலை வானொலியொன்றில் பேசிய கல்வியாளர் ஒருவர் ஆங்கிலப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்போரை கடுமையாக சாடினார். தாய் மொழியில் கல்வி கற்பதே சிறந்தது என்றும், ஆங்கிலத்தை ஒரு பாடமாக பயின்றாலே போதுமானது என்றார்.

தனியார் பள்ளியில் படிக்கின்ற குழந்தைகள் நடுத்தர, பணக்கார மனிதர்களின் பிள்ளைகள். தனியார்  பள்ளிகள் ஏழைகளே இந்தியாவில் இல்லை என்பதைப் போன்ற ஒரு மாயையை உருவாக்கி விடுகிறார்கள். நடுத்தர வர்க்கமும், பணக்காரக் குழந்தைகளுமே நிறைந்திருக்கும் பள்ளியில் படிப்பவன், ஏழைகள் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியவர்கள், அருவருப்பானவர்கள் என்ற எண்ணத்தோடு வளர்கிறான்.

"எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை, உன்னைப் படிக்க வைக்கிறோம்" என்று சொல்லும் போது, அந்த குழந்தைக்கு பணமே உலகில் மிக முக்கியமானது என்று பதிந்து விடுகிறது. அதனால் தான் பணத்துக்காக சுகப் பிரசவம் ஆகப் போகிற குழந்தையைக் கூட caesarian operation மூலம் பிறக்க வைக்கும் மருத்துவர்களாகவும், பாதிப் பணத்தை கொள்ளையடித்து விட்டு எளிதில் இடிந்து விழும் கட்டிடங்களை கட்டும் என்ஜினீயர்களாகவும் அவர்கள் மாறுகிறார்கள் என்பது அவர் கருத்து.

நிகழ்ச்சித்  தொகுப்பாளர் சொன்ன கருத்து "கியூபா, கனடா போன்ற நாடுகளில், கல்வி, மருத்துவ சேவை ஆகியவை அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன, அந்நாட்டு குடிமக்களுக்கு இலவசமாகவோ, மிகக் குறைந்த கட்டணத்திலோ கிடைக்கின்றன. இங்கோ தலை கீழ், மதுபானக் கடைகளை அரசாங்கமே எடுத்து நடத்துகிறது, கல்வி, மருத்துவமனைகளை தனியார் நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்து கொள்ளை லாபம் பார்க்கின்றன."  

தனியார் பள்ளிகள், கல்லூரிகளை அரசாங்கம் தன வசம் கொண்டு வர வேண்டும். குறைந்த பட்சம், பள்ளிக் கல்வியாவது இந்தியாவின் அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாகவோ, குறைந்த கட்டணத்திலோ கிடைக்க வேண்டும்.

சென்ற ஆண்டு +2 & SSLC தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பெரும்பாலும் அரசாங்க, தமிழ்ப் பள்ளிகளில் பயின்றவர்கள். எனவே, தனியார் பள்ளிகளில் மட்டுமே தரமான கல்வி கிடைக்கிறது என்று எண்ணாமல், அரசாங்கப் பள்ளிகளிலும் குழந்தைகளை சேர்க்க வேண்டும். என்னையும் சேர்த்து, அனைவருக்கும் அந்த எண்ணம் வர வேண்டும், அதை செயல்படுத்த வேண்டும்.





 

4 comments:

மதுரை சரவணன் said...

அரசாங்கப் பள்ளிகள் தான் மாநில முதல் மதிப்பெண் வாங்குகின்றனர். இது எங்க ஜனங்களுக்கு புரியப் போகுது...நல்ல பதிவு . வாழ்த்துக்கள்

Joe said...

நன்றி சரவணன்.

virutcham said...

நல்ல பதிவு.
கட்டணம் அதிகம் வாங்குவதோடு மட்டும் இன்றி பெற்றோரை அலட்சியப் படுத்தல், அடிப்படை வசதிகள் கூட இல்லாத வகுப்பறை , கால் நடைக் கொட்டில் மாதிரி அடைக்கப் பட்ட பிள்ளைகள், சின்ன விஷயத்துக்கும் பட்டென்று குழந்தைகளை அடித்து விடும் ஆசிரியைகள், எடுத்த எடுப்பிலேயே கை ஒடியக் கொடுக்கப் படும் வீட்டு பாடங்கள் (இந்த பட்டங்கள் பிள்ளைகளுக்கா, பெற்றோருக்கா ?)

Joe said...

நன்றி விருட்சம்.

அருமையான கருத்துக்கள்.நம்மவர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை (என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்)